டிசம்பர் மாதம் 03ஆம் திகதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் உலகலாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்படுகின்றது. இவ்வாண்டு ‘அனைத்துத் தரப்பினரையும் உட்படுத்திய அபிவிருத்திக்கான பண்புரு மாற்றத்தீர்வு: அனைவராலும் அணுகத்தக்க ஓர் சமவாய்ப்புள்ள உலகத்தை உருவாக்கும் புத்தாக்கச் சக்தியின் வகிபாகம்’ எனும் தொனிப்பொருளில் அனுஸ்டிக்கப்படுகிறது.
கருவி மாற்றுத்திறனாளிகளின் சமூகவள நிலையம் இவ்வாண்டு மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வினை கடந்த டிசம்பர் 03 அன்று தெல்லிப்பழை இராஜேஸ்வரி மண்டபத்தில் அனுஸ்டித்திருந்தது. கருவியின் தலைவர் திரு.க.தர்மசேகரம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் போதனா வைத்தியசாலை மருத்துவர் வைத்திய கலாநிதி சி.சிவன்சுதன் அவர்களும் சிறப்பு விருந்தினராக யாழ் இராமநாதன் கல்லூரி ஆசிரியை செல்வி றஞ்சினி விஜயரட்ணம் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக பருத்தித்துறை சதாவதானி கதிரவேற்பிள்ளை சிக்கனக் கடனுதவிக் கூட்டுறவுச்சங்கத்தின் தலைவர் திரு கந்தப்பு தங்கராசா அவர்களும் வடமாகாண யாழ்தூர சேவைப்பேருந்து சங்கத்தின் தலைவர் திரு.விநாயகமூர்த்தி சஜிந்தன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
இந்நிகழ்விற்கான ஆசியுரையினை ஸ்ரீ சத்தியசாயி சர்வதேச அமைப்பின் வடபிராந்திய மனிதமேம்பாட்டுக்கல்வி இணைப்பாளர் திரு.ம.எ.சிவநேசன் அவர்கள் வழங்கியிருந்தார்.
இந்நிகழ்விற்கான வரவேற்புரையினை கருவியின் பொருளாளர் திரு.ஜே. கொன்கிளேடியஸ் அவர்களும் நன்றியுரையினை கருவியின் செயலாளர் திரு.து.யசிந்தன் அவர்களும் அறிமுக உரையினை கருவி நிர்வாகசபை உறுப்பினர் திரு.கணபதி சர்வானந்தா அவர்களும் நிகழ்த்தியிருந்தனர்.
இந்நிகழ்வில் யாழ் இராமநாதன் கல்லூரியின் சங்கீத ஆசிரியை செல்வி செ.குகனேஸ்வரி அவர்களின் சாஸ்திரிய இசை நிகழ்வு இடம் பெற்றது. இந்நிகழ்விற்கான பக்க வாத்தியங்கள் வயலின் திரு வே.சரவணபவன், மிருதங்கம் திரு.க. தர்மசேகரம்.
இந்நிகழ்வில் கருவி நிறுவனம் மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் பாடசாலை மாணவர்களிடையே நடாத்திய கவிதை, கட்டுரை, சிறுகதை, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன் கருவி அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணங்கள் உடைகள் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டன. குறித்த இந்நிகழ்வில் 700க்கு மேற்பட்டோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.