ஓவியர் ஆ.ளு சிவதாசன் அவர்கள் வரைந்த ஓவியங்களை ஓவியக்கண்காட்சி ஒன்றினூடாக கருவி நிறுவனம் காட்சிப்படுத்தியிருந்தது. மாற்றுத்திறனாளிகளுக்காக பணியாற்றி வருகின்ற இந்நிறுவனம் நடாத்திய குறித்த இவ் ஓவியக்கண்காட்சி செப்ரெம்பர் 29, 30 மற்றும் ஒக்டோபர் 1ம் திகதிகளில் யாழ்ப்பாணம், இல.15, றக்கா வீதியில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்ற ஓவியக்கூடத்தில் காலை 10.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை இடம் பெற்றது.
இக்கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வு செப்ரெம்பர் 29ம் திகதி காலை 10 மணிக்கு கருவியின் தலைவர் திரு க.தர்மசேகரம் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி நித்திலவர்மன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக திரு ம.செல்வின் (தன்னார்வ வள ஆளனியினர்), திரு இ.கிருபாகரன் (ஆசிரியர் சுழிபுரம் விக்ரோரியாக் கல்லூரி, சிற்பக் கலைஞர்) ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர். ஓவியக் காட்சிக்கூடம் பிரதம விருந்தினரால் திறந்து வைக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற இந்நிகழ்வில் ஓவியர் ஆ.ளு சிவதாசன் அவர்களை கருவி நிறுவனத்தினர் பொன்னாடை போர்த்தி கௌரவித்திருந்தனர்.
மூன்று நாட்கள் இடம்பெற்ற குறித்த இந்நிகழ்வை மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் பார்வையிட்டு பயன் பெற்றனர்.
